உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 15ஆம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் கோலாகமாக நடைபெற்றது. ஏறத்தாழ 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் எழுந்தருளினார்.
பின்னர், ஆழித் தேரோட்டம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரசினம் செய்தனர்.
ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர் எஸ்.பி. கருண்கரட் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.