நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் மாணவர்களும், பொதுமக்களும் அசுத்தமான ஓடை நீரை அருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சின்ன வரகூர் கோம்பை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள ஓடைக்குச் சென்று நீரைப் பருகும் அவல நிலை உள்ளது. அந்த ஓடையிலேயே துணி துவைத்தும், வேறு வழியின்றி அதையே குடித்தும் வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொகுதியிலேயே இந்த அவல நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.