தேர்தல் நெருங்கும் நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி, டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் நடந்த ராம நவமி விழாவில் கலந்துகொண்டுள்ளார். இந்துக்கள் மீதான திடீர் பாசம், கனடா தேர்தலில் லிபரல் கட்சிக்கு கை கொடுக்குமா ? கை கழுவுமா ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சொந்த கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம், ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகினார். இதனால், கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அவரது முயற்சியையும், ஒட்டாவா நேபியன் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான அவரது வேட்புமனுவையும் லிபரல் கட்சி ரத்து செய்தது.
மூன்று முறை லிபரல் எம்.பி.யாக இருந்த அவரைத் தடை செய்ததற்கான எந்த காரணத்தையும் லிபரல் கட்சி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
கனடாவில் வாழும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாலும், காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுப்பதாலும் தான், தலைமை பதவிக்கு லிபரல் கட்சி தடை செய்ததாகச் சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட்டில், நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா- கனடா உறவு பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இந்தியாவுக்கு வந்த சந்திரா ஆர்யா, பிரதமர் மோடியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் மார்க் கார்னி கனடாவின் பிரதமரானார். அக்டோபரில் நடக்க வேண்டிய தேர்தலை முன் கூட்டியே நடத்த திட்டமிட்டார். அதனால், வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே வேலைவாய்ப்பின்மை, அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு எனப் பாதிக்கப் பட்டிருக்கும் கனடா, ட்ரம்பின் வரி விதிப்பால், பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.
நாட்டின் 88 சதவீத தொழிலதிபர்கள் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், பொருளாதாரம் வேகமாகச் சரிந்து வருவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், நிறுவனச் செலவுகளைப் பெருமளவில் குறைத்து விட்டதாகவும் எந்த புதிய முதலீடுகளையும் செய்யவில்லை என்றும், 67 சதவீத தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த வாரம், கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு கொண்டவர்களால், கனடாவில் இந்து கோயில்கள் மீதான மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதேபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் கனடாவின் மோசமான மத சகிப்பின்மையை எடுத்துக்காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன
கனடாவில், லிபரல் கட்சி, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது, இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிக்கத் தகுதியுடைய சுமார் 600,000 இந்துக்கள் கனடாவில் உள்ளனர். மெட்ரோ வான்கூவர், கால்கரி மற்றும் எட்மண்டன் போன்ற நகரங்களில் இந்து வாக்குகளே தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன.
இதனாலேயே, இந்துக்களைச் சமாதானப்படுத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் கார்னி டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் ராமநவமி வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட Sikhs for Justice அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன், இந்துக்களைக் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு, எச்சரித்திருந்தார். கனடாவில், கோயில்கள் மீதான காலிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல்களும், இந்து எதிர்ப்பு நடவடிக்கைகளும், கனடாவில் இந்துக்களை ஒன்றிணைய வைத்துள்ளன.
இந்துக்கள் லிபரல் கட்சிக்கு ஆதரவாக மாறுவார்களா ? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.