அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரியின் எதிரொலியால், அமெரிக்காவைத் தவிர்த்து பிறநாடுகளுக்குச் சீனா, ஏற்றுமதியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மலிவு விலை பொருட்கள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க, ஏழு அம்சத் திட்டத்தை ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு பரிந்துரைத்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனா மீது ஏற்கனவே 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கூடுதலாக 34 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. மொத்தமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குச் சீனா கூடுதலாக 34 சதவீத வரி விதித்துள்ளது.
சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர், சர்வதேச அளவில், பங்குச்சந்தை உட்பட பல்வேறு துறைகளில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சீனா தனது ஏற்றுமதிகளை வேறு நாடுகளுக்குத் திருப்பி விடக்கூடும் என்ற கவலையும் அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சீனப் பொருட்களின் இறக்குமதிகள் மீதான கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப் படுத்தியுள்ளது. ஏற்கெனவே, குண்டூசி முதல் மொபைல் போன் வரை, லைட்டர் தொடங்கி பட்டாசு வரை சீப்பு முதல் செருப்பு வரை எந்தப் பொருளானாலும், உலகமெங்கும் சீனாவின் மலிவு விலை பொருட்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. இந்தியப் பொருட்களை விடச் சீனப் பொருட்களின் விலை சுமார் 70 சதவீதம் வரை குறைவாக உள்ளது.
உணவு மற்றும் எரிசக்தி முதல் தொழிற்சாலை மற்றும் ரூபாய் அடிப்படையிலான வர்த்தகம் வரை, சீனா முன்வைக்கும் வர்த்தகச் சவால்களைச் சமாளிக்க ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, 7 அம்ச திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார்.
உடைந்து கொண்டிருக்கும் உலக ஒழுங்கில், இந்தியாவுக்கான வரைபடம் என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதோடு, மற்ற நாடுகள் தடுமாறும் இடங்களில், இந்தியாவே வழி நடத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இந்தியா, உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கும் உதவி வருவதாகக் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, நிலையான வேளாண் வளர்ச்சிக்காக, நவீன மற்றும் நீண்டகால வேளாண் முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
குறிப்பாக, சீன இறக்குமதிகளுக்கு ரூபாயில் பணம் செலுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்றும், வெளிநாட்டுக் கடன்களையும் ரூபாயில் செலுத்துவதற்கு முயற்சி செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு முதலாமாண்டு முழு கடன் தள்ளுபடியையும், மற்ற மாவட்டங்களில், 50 சதவீத கடன் தள்ளுபடியையும் அரசு அனுமதிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
சீனாவில் இருந்து நுகர்வோர் பொருட்கள் இல்லாமல், மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, அடுத்த 10 ஆண்டுகளுக்குள்,மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக, மற்ற நாடுகளுடன் அறிவையும் அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளையும் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, அதுதான் மிகவும் நியாயமான மற்றும் நிலையான உலகளாவிய ஒழுங்குக்கான ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார்.
சீனப் பொருட்கள் இறக்குமதியால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, கட்டாயமாகச் சில கொள்கைகளை மாற்றவும், கடமைகளைச் செய்யவும் அவசியம் உள்ளது. அப்போதுதான் ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு கூறுவது போல், வல்லரசுக் கனவு காணும் இந்தியா, தற்சார்பு நிலையை அடைந்து, பொருளாதாரத்தில் உயர்ந்து, உலக வர்த்தகக் கட்டமைப்பில் உயர்ந்து நிற்க முடியும்.