சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1996-2001ம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராகத் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. விசாரணைக்கு ஆஜரான பொன்முடி தரப்பு, தங்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தது.
இதை ஏற்ற நீதிபதி ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கத் தமிழக அரசு மற்றும் பொன்முடி தரப்புக்கு உத்தரவிட்டார்.
மேலும் வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும் என்றால், மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது என கூறி விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.