வங்கதேசத்தில், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில், KFC, Puma, Bata, Domino’s, மற்றும் Pizza Hut உள்ளிட்ட பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. போராட்டக் காரர்களால், இந்நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் சூறையாடப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இஸ்ரேல்-ஹமாஸ் இரண்டாவது போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறாத நிலையில், ஹமாஸ் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரமாக்கி உள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து, தலைநகர் டாக்கா தொடங்கி, சில்ஹெட், சட்டோகிராம், குல்னா, பரிஷால், கும்மிலா உள்ளிட்ட வங்கதேசத்தில் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.
MARCH FOR PALESTINE என்று பெயரில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியும் போராட்டமும், வன்முறையாக மாறியது.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே, இஸ்ரேலுக்கு ஆதரவான பன்னாட்டு நிறுவனங்கள் மீதான கோபமாக மாறியது. இஸ்ரேலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பும் கடைகளைப் போராட்டக்காரர்கள் குறிவைத்தனர்.
போக்ரா நகரில், சத்மாதா சந்திப்புக்குப் பேரணியாகச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொது மக்களும், இஸ்ரேலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் சென்றனர். காசாவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதற்குச் சர்வதேச பிராண்டுகள் உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டினர்.
இஸ்ரேல் பிராண்டுகளை நாடு தழுவிய அளவில் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தனர். பாட்டா ஷோரூமைத் தாக்கிய போராட்டக்காரர்கள் கற்களை வீசி, கடையை உடைத்தனர். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பாட்டா ஷோரூமின் கண்ணாடிக் கதவுகளைச் செங்கற்களால் உடைத்து, பின்னர் ஏராளமானோர் காலணிகளைக் கொள்ளையடிப்பது தெளிவாக தெரிகிறது. இதே காலணிகள் பிறகு, பேஸ்புக் சந்தையில் விற்பனைக்கு வந்தன என்றும் கூறப்படுகிறது.
இதேபோல், சில்ஹெட்டில், KFC கடைக்குள் நுழைந்த போராட்டக் காரர்கள், மொத்த கடையையும் அடித்து நொறுக்கினர். மேலும், சிட்டகாங்கில் உள்ள KFC மற்றும் Pizza Hut கடைகளைச் சேதப்படுத்தினர்.காக்ஸ் பஜாரில் உள்ள இந்த இரண்டு நிறுவனங்களின் கடைகளும் சூறையாடப் பட்டன.
KFC, Puma, Bata, Domino’s, மற்றும் Pizza Hut உள்ளிட்ட பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை நிலையங்களைப் போராட்டக் காரர்கள் அடித்துக் நொறுக்கினார்கள். இஸ்ரேலுடன் தொடர்பிருப்பதாக எண்ணி இந்த பன்னாட்டு நிறுவனங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன. உண்மையில், இஸ்ரேலுடன் இந்நிறுவனங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செக் குடியரசில் ஒருதனிக் குடும்பத்துக்குச் சொந்தமான பாட்டாவுக்கும், இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வதந்தியால் பாட்டா ஷோரூம் தாக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வங்க தேசத்தில் உள்ள 12 முக்கிய நகரங்களில், போராட்டக்காரர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளைத் தாக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளன. இது தொடர்பாக இதுவரை 72 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை, டாக்கா பல்கலைக்கழகத்தின் “ஆசாத் பாலஸ்தீனம்” அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையை எதிர்த்தும், 2021 ஆம் ஆண்டு பங்களாதேஷ் பாஸ்போர்ட்களில் இருந்து நீக்கப்பட்ட “இஸ்ரேல் தவிர” என்ற பிரிவை மீண்டும் கொண்டுவரக் கோரியும் பேரணி நடத்தினர்.
ஆசாத் பாலஸ்தீனம் ராஜு நினைவு சிற்பத்திலிருந்து சுதந்திர பாலஸ்தீன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் 70 அடி நீள பாலஸ்தீனக் கொடியை ஏந்திச் சென்றனர். மேலும், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உருவ பொம்மைகள் எரிக்கப் பட்டன.
இது ஒரு அரசியல் நெருக்கடியை விட மோசமானது என்று கூறியுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, இது ஒரு தேசிய அவசரநிலை என்றும், இதனைக் கண்டு கொள்ளாமல், சர்வதேச நாடுகள் அமைதியாக இருந்தால், விரைவில் வங்கதேசம் அடுத்த ஆப்கானிஸ்தானாக மாறும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது. மேலும், ஜனநாயகம் மீண்டும் வங்க தேசத்தில் உருவாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு வழிவிட்டு டாக்டர் முகமது யூனுஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் மீதான தாக்குதல் நடந்த அதே நாளில் தான், தலைநகர் டாக்காவில் சர்வதேச வணிக மாநாடான வங்கதேச முதலீட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. எனவே, நிச்சயமாக அந்நிய முதலீடுகள் வங்க தேசத்துக்கு வராது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.