ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீசானது. நடிகர் அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து, நடனம் ஆடி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. குறிப்பாக சென்னையில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானதையொட்டி ரோகினி திரையரங்கம் கொண்டாட்டத்தால் களைகட்டியது.
முதல் காட்சி வெளியான நிலையில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று திரைப்படத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்.
நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது மகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படத்தை பார்த்து ரசித்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையரங்கில் கூடிய அஜித் ரசிகர்கள் மேல தாளம் முழங்க நடனம் ஆடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் நடிகர் அஜித்தின் 25 அடி பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து நடனமாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குட் பேட் அக்லி திரைப்படத்தை வரவேற்று ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்னர்..