திருவண்ணாமலை அருகே சட்ட விரோதமாக மண் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலசபாக்கத்தை அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தப்படுவதாக ஆதமங்கலம் புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில், அதே பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர் வழிமறித்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனின் சீருடையை பிடித்து இழுத்து குமரன் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.