தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட வனப்பகுதிகளில் மண் வளத்தைப் பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் எனத் தமிழக வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கருவேலம், யூகலிப்டஸ் போன்ற மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வனத்துறை தரப்பில், அந்நிய மரங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அவற்றை அதிகமாக அகற்றிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தின் 25 மாவட்ட வனப்பகுதிகளில் மண் வளத்தைப் பாதிக்கும் விதமாக 4 ஆயிரத்து 38 ஏக்கர் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.