பாஜக மாநில தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 02.00 மணி முதல் மாலை 4 மணி வரை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F- ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராக உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இந்த பதவிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய, மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.