சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளிக்கு, முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றியதாக மருத்துவமனை நிர்வாகம்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த வைதேகி, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வைதேகிக்கு வயிற்றில் கட்டி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் கடந்த 4-ம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மறுநாள் அறுவை சிகிச்சைமூலம் வயிற்றிலிருந்த கட்டி அகற்றப்பட்டது.
தொடர்ந்து ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் வைதேகிக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவரது உறவினர் உமாதேவி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் வைதேகி மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.