ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கபடும் என்று பாஜக மாநில தேர்தல் அதிகாரி M.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனுக்கள் இன்று (11.04.2025) மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெறப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பத்து பேர் கையெழுத்திட்ட பல விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து விண்ணப்பங்களுமே கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் MLA அவர்களையே முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேறு யாரையும் முன்மொழிந்து எந்த விண்ணப்பங்களும் பெறப்படவில்லை.
மேலும், மாநில தலைவர் K.அண்ணாமலை, பாஜகவின் முன்னாள் மாநில தலைவர்கள் பொன். இராதாகிருஷ்ணன் Ex.MP, திருமதி.டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், திரு. Dr.L.முருகன் அவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நயினார் நாகேந்திரன் MLA அவர்களை ஒரு மனதாக தலைவர் பதவிக்கு முன் மொழிந்தனர்.
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவானது நாளை சென்னை 12.04.2025, மாலை 4 மணி அளவில் ஸ்ரீவாரி கல்யாண மண்டபம். வானகரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.