ஊதிய உயர்வு பிரச்னைக்குத் தீர்வு கோரி கோவையில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட பாதுகாப்புடன் ஊதிய உயர்வு கோரியும், ஆறு சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், இரு மாவட்டங்களின் ஆட்சியர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால், சோமனூரில் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சோமனூரில் விசைத்தறியாளர்கள் 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தொடர் போராட்டத்தினால் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.