பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சைவம், வைணவ சமயங்கள் குறித்தும் மிகவும் கொச்சையாகப் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன் எதிரொலியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனது பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தித் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள தனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
பலரது மனதைப் புண்படுத்தும் வகையில் தனது பேச்சு அமைந்ததற்கு அனைவரிடமும் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.