பாமகவின் தலைவராக தொடர்ந்து, தான்தான் செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மடலில், கட்சியின் தலைவர் பதவி குறித்து குழப்பங்கள் நிலவி வருவதாகவும், இதனால் கட்சி வளர்ச்சிக்கும், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த மடலை எழுதுவதாகவும் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தான் கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டியது தனது முக்கிய கடமை என குறிப்பிட்டுள்ள அன்புமணி, அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம் என விளக்கம் அளித்துள்ளார்