மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா, துபாயில் ஐஎஸ் உளவாளியை ரகசியமாக சந்தித்து பேசியிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானின் லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா அண்மையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், ராணாவும், மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்த டேவிட் ஹெட்லி இந்தியாவிற்கு சுற்றுலா விசா மூலம் வந்து, உளவு பார்த்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் துபாய் சென்ற உளவாளி டேவிட்டை, தஹாவூர் ராணா தனது மனைவியுடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போதுதான், மும்பையில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்தை இருவரும் தீட்டியதாக, என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.