ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக் காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15 வரை மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் மீனவா்கள் விசைப் படகுகளில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டால், மீன் வளா்ச்சி பாதிக்கப்படும். இதனால், இந்தக்காலக் கட்டத்தில் மீன்பிடிக்கச் செல்ல விசைப் படகு மீனவா்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருவதால், விசைப் படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இந்தத் தடைக்காலத்தின் போது, விசைப் படகு மீனவா்கள் தங்களது படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
தடைக்காலத்தை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா், ரோஜ்மாநகர் தொண்டி, சோளியகுடி என மாவட்டம் முழுவதும் 1,650- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி படகுத் துறையில் நிறுத்தப்பட்டு வருகின்றன.