கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரை விஷூ கனி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் சித்திரை விஷூ பண்டிகை மலையாள மொழி பேசும் மக்களால், கன்னியாகுமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில், தர்ம சாஸ்தா கோயில் உட்பட முக்கிய கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டுச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
மேலும் கோயிலில் கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் கை நீட்டம் வழங்கப்பட்டது.
இதேபோல் கோவை மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், விஷூ கனி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் பலவகை பழங்களால் அலங்காரம் செய்தும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், சிவபெருமான், அம்பாள், முருகப்பெருமான், நவகிரகங்கள் என அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.