தீரன் சின்னமலை பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட மாவீரரும், கொங்கு நாட்டைச் சேர்ந்த ‘தீர்த்தகிரிச் சர்க்கரை’ என்று புகழப்பெற்றவருமான, அய்யா தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் இன்று.
தனது இளம் வயதிலேயே, சிலம்பம், மல்யுத்தம், வில்பயிற்சி போன்ற போர்க் கலைகளில் தன்னை அனுபவமிக்கவராய் வளர்த்திக் கொண்டவர், தேசம் ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் போக்கை, ஓடாநிலைக் கோட்டை கட்டி கடுமையாக எதிர்த்தவர்.
இத்தகைய மாவீரரான தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினத்தில், அவரது வீர வரலாற்றினை பெருமையோடு போற்றுவோம்; நமது சந்ததிகளுக்கு எடுத்துரைத்து புகழ் பரப்புவோம் என தெரிவித்துளளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இளம் வயதிலேயே நாட்டுக்காக பெரும் படை திரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளர்.
சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 ஆம் ஆண்டு, ஈரோடு காவிரிக் கரை போரிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலை போரிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் பெரும் வெற்றி பெற்றவர். வீரத்தின் அடையாளமாக விளங்கியவர் என தெரிவித்துள்ளார்.
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டிருந்தாலும், சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் அவரின் ஆலயத் திருப்பணிகளுக்குச் சான்று. தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாது, நாட்டிற்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.