கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை சேர்ந்த 4 மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பைபர் படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனர்.
மேலும், மீனவர்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன், வாக்கிடாக்கி உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்களும் கரை திரும்பிய நிலையில், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நாகையைச் சேர்ந்த 3 மீனவர்களும் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் கோடியக்கரை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.