திமுக-வினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தெருவுக்கு தெரு பேனர் மற்றும் கொடிகள் கட்டப்படும்போது, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அவற்றை செய்ய அனுமதிப்பதில்லை என பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள YMCA திடலில் அவருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக திடலுக்கு வரும் பீட்டர்ஸ் சாலையின் இருபுறமும் பாஜக-வின் கொடிகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அனுமதியின்றி கொடிகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையினர் அந்த கொடிகளை அகற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், திமுக-வினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தெருவுக்கு தெரு பேனர் மற்றும் கொடிகள் கட்டப்படும்போது, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அவற்றை செய்ய அனுமதிப்பதில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், அனுமதி பெற்று வைக்கப்பட்ட கொடிகளை காவல்துறையினர் அகற்றியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர், திமுக-வுக்கு ஒரு சட்டம் தங்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பினார்.