நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் எரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுபோன்ற எந்த கழிவுகளும் எரிக்கப்படவில்லை என மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகள் குறித்து செய்திகள் வெளியான நிலையில் வழக்கு பதிவு செய்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு உணவு கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள் மட்டுமே இருந்ததாக அறிக்கை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவக் கழிவுகள் கிடந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகள் வெளியான நிலையில் தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கை பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அரசு அதிகாரிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.