ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான மார்க்ரம் சிறப்பாக விளையாடி 66 ரன்களும், ஆயுஷ் பதோனி 50 ரன்களும் எடுத்தனர். கடைசியாக இறங்கிய அப்துல் சமத் 10 பந்துகளில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநேர முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் பொறுப்புடன் விளையாடி 74 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றின் இளம் வீரரான, 14 வயதேயான சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார்.
முதல் பந்திலேயே சிக்சர் விளாசிய அவர், 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். கடைசி பந்து வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது.