அமெரிக்காவின் வர்த்தகப் போரைச் சமாளிப்பதற்காக, அதிக அளவில் இந்திய பொருட்களை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக, சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம் சீனாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் இந்தியா நுழைகிறது. இந்திய-சீனா உறவில் தொடங்கி இருக்கும் புதிய அத்தியாயம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தான் எப்போதும் பொருளாதார போட்டி உள்ளது.
இருந்தாலும், சீனாவில் இருந்து தான் அமெரிக்கா அதிகமாக இறக்குமதி செய்கிறது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், பரஸ்பர வரியை விதித்தார். போட்டிக்குப் போட்டியாகச் சீனாவும் அமெரிக்காவுக்கு வரி விதித்தது.
சீனாவை தவிர அனைத்து நாடுகளுக்குமான வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள ட்ரம்ப், சீனாவுக்கான வரியை 245 சதவீதம் என்று அறிவித்தார். எவ்வளவு வரி விதித்தாலும் தளராமல் திருப்பியடிக்க தயாராகி வருகிறது சீனா. அமெரிக்காவின் பரஸ்பர வரி, ஒருதலைப்பட்சமானது என்றும், நியாயமான வர்த்தக சூழலை வளர்ப்பதற்குப் பதிலாக அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், மற்ற நாடுகளின் சட்டபூர்வமான உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் வர்த்தகப் போர், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகச் சீனா கூறியுள்ளது.
இந்தச் சூழலில், வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பை ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது. ராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்குமான உறவு, நெருக்கமடைய வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்து இருந்தார்.
எல்லைப் பிரச்சினையைத் தவிர, இருநாடுகளுக்குமான கிட்டத்தட்ட 75 சதவீத பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக, இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங், போட்டி நாடுகளாகக் கருதாமல், இரு நாடுகளும் ஒருங்கிணைந்து வளர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
குறிப்பிடத்தக்க வர்த்தகப் பற்றாக்குறை இருந்தபோதிலும், சீனா இந்தியாவிடமிருந்து அதிக பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. அதனால் தான், முதல்முறையாக, இந்தியப் பொருட்களைத் தனது வர்த்தகச் சந்தையில் நுழைய அனுமதித்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய சந்தை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பெரிய வணிக வாய்ப்புகளை வழங்கும் என்றும், அதே வேளையில், இந்திய நிறுவனங்கள், சீன நிறுவனங்களுக்கு ஒரு சமமான ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என்றும் சூ ஃபீஹோங் கூறியுள்ளார்.
இதற்காக, சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி மற்றும் சீன-தெற்காசிய கண்காட்சி போன்ற சீன வர்த்தக நிகழ்வுகளை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தக் கொள்ளவும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மிளகாய், பருத்தி நூல் மற்றும் இரும்புத் தாது ஆகிய பொருட்கள் முறையே 17 சதவீதம், 240 சதவீதம், மற்றும் 160 சதவீதம் அதிகரித்துள்ளது. என்றும் குறிப்பிட்டார். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 99.2 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ள நிலையில், சீனாவின் நடவடிக்கை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்குச் சாதகமான வணிகச் சூழலை இந்தியா உறுதி செய்யும் என்றும் சூ ஃபீஹோங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் அல்லது மனிதவளத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீன எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று தெளிவு படுத்திய சூ ஃபீஹோங், கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 85,000 இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கியதையும் சுட்டி காட்டியுள்ளார்.
எல்லைப் பிரச்னை, நதிநீர் பகிர்வு மற்றும் ஊடக பரிமாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான சீன தூதர், மேம்படுத்தப்பட்ட உறவுகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் சீனா கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்தியா-சீனா உறவுகளில் இது ஒரு நேர்மறையான மாற்றம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஒரு காலத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியாவும் சீனாவும் பங்களித்தன என்று கூறியிருந்த பிரதமர் மோடி, பரஸ்பர நன்மை பயக்கும் இருநாடுகளின் ஒத்துழைப்பு, உலக அமைதி மற்றும் செழிப்புக்கும் அவசியமானது என்றும் வலியுறுத்தியிருந்தார். வருங்காலத்தில் ட்ராகனும் யானையும் நடனமாட தொடங்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.