திருச்சியில் வீட்டில் இருந்த பெண்களிடம் திமுக மாமன்ற உறுப்பினர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி புதூரில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான இடத்தை திமுக மாமன்ற உறுப்பினர் முத்துச் செல்வம், அபகரிக்கும் நோக்கில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முத்தையாவின் வீட்டுக்குச் சென்ற முத்துச்செல்வம், வீட்டை காலி செய்யக் கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. தொடர்ந்து முத்தையாவின் மகள்களை ஆபாசமாகத் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் வீட்டு வாசலில் இருந்த இரும்பு கேட்டை, உடைக்க முயன்றுள்ளார். இது குறித்துப் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.