பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைதல், உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிடப்போவதாக மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி, சட்டமன்றத்தை முற்றுகையிடுவதற்காகச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர். கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை, ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.