திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 15 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மதியம் வழங்கப்பட்ட சத்துணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையறிந்த ஆசிரியர்கள் உடனே பெற்றோர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே, பள்ளியின் முன்பாக கூடிய பெற்றோர், ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக சத்துணவு சமைக்கப்படும் அறையில், கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் விஷம் கொண்ட சாக்பீஸ் இருந்ததும் தெரியவந்துள்ளது.