பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயலுக்கு சமூகத்தில் இடமில்லை. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.
அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு எந்த பணமும் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, ஜம்மு-காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் மற்றும் சிறிய காயங்களுக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துயரமடைந்த குடும்பங்களுக்கு அஞ்சலி. இந்த இருண்ட நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். ஆனால் பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் பாதிக்காது. மேலும் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.