சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2002இல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 2013இல் அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற தொடர் விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டார்.
மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.