திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் அவதியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆம்பூர் மின் பகிர்மான நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வாணியம்பாடி ஜோலார்பேட்டை உட்பட திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காலை 11 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இரவு 7 மணி வரை மின்சாரம் வழங்கப்படாததால் பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் அவதியடைந்தனர். குறிப்பாக ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காற்றுக்காக சாலைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்தனர்.
மேலும் முதியவர்கள், நோயாளிகள் பலரும் மூச்சுத் திணறலுக்கு ஆளானார்கள்.ஆம்பூர் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் இருளில் மூழ்கியதோடு வணிகத்தை தொடர முடியாமல் வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.