அடிப்படைத் தேவையான மருத்துவமனைகளைக் கூட முறையாகப் பராமரிக்காமல், நான்கு வருடங்களாக அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒரே நாளில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையிலும், சென்னை வண்ணாரப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையிலும், மின்சாரம் இல்லாமல், பராமரிப்பற்ற ஜெனரேட்டரைப் பயன்படுத்த முடியாமல், செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்தும், அறுவை சிகிச்சை அறையில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை உயிருக்கு ஆபத்தான நிலையில் பரிதவிக்க விட்டும், அவல நிலையில் தள்ளியிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலத் தலைநகரில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் கூட, மின்சாரம் துண்டிக்கப்படுவதும், போதிய மாற்று ஏற்பாடுகள் இல்லாததும் தமிழகத்தின் சாபக்கேடு. சட்டசபையில், மின்சாரத்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும், தங்களுக்குத் தாங்களே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கையில், தமிழகத்தின் உண்மை நிலை இப்படியாக இருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தின் சுகாதாரத்துறை தரம் தாழ்ந்து போய் விட்டது. அடிப்படைத் தேவையான மருத்துவமனைகளைக் கூட முறையாகப் பராமரிக்காமல், நான்கு வருடங்களாக அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.