காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வலின் உடலைக் கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தது தேசத்தையே உலுக்கியுள்ளது.
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் உடலைக் கண்டு மனைவி கதறிய காட்சிகள் தான் இவை.
தேனிலவுக்காக வினய் நர்வலுடன் காஷ்மீர் செல்லும் போது அவரது மனைவி, ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார் தனது கணவரை இழக்கப் போகிறோம் என்று….
பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வினய் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தனது கணவரைக் காப்பாற்ற வேண்டும் என அபயக் குரல் எழுப்பிய அவரது மனைவிக்கு அந்தச் சூழலில் இறைவனின் கருணை கிடைக்கவில்லை.
உதவி கேட்டு ஓய்ந்து போன அவர், கணவரின் மூச்சு அடங்கி விட்டதை அறிந்து அவரது உடலுக்கு அருகிலேயே உறைந்து போய் அமர்ந்து விட்டார். திருமணமான ஒரே வாரத்தில் கணவனை இழந்து பரிதவித்த அவர், கணவரின் சலமனற்ற முகத்தையே வேதனை தோய்ந்த கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது இந்தப் புகைப்படம் தான் ஒட்டுமொத்த தேசத்தையும் வேதனையால் உலுக்கி இருக்கிறது.
ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் நர்வல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் அதிகாரியாகச் சேர்ந்தார். கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஹிமான்ஷியை கரம் பிடித்த அவர், தேனிலவு கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விசா கிடைக்காத காரணத்தால் மனைவியுடன் காஷ்மீருக்கு சென்றார்.
பயங்கரவாத தாக்குதலில் சிக்கும் முன்பாக மனைவியுடன் உற்சாகமாக ஆடிப் பாடி, வினய் நர்வல் எடுத்துக் கொண்ட வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கிறது. மனதில் ஆயிரம் கனவுகளுடன் புது வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்த ஜோடியின் வாழ்க்கையை, ஒரு நொடியில் சிதறடித்திருக்கிறது பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டம்…. இறுதி ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உறவினர்கள் புடைசூழ வினய் நர்வலின் உடல், எடுத்துச் செல்லப்பட்டது.
முன்னதாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்து படுபாதக செயலை செய்து, வினய் நர்வல் உட்பட 26 பேரை கொடூரமாக கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்.
எதிர்காலத்தில் தீவிரவாதிகளை அனுப்புவதைப் பற்றி நினைக்கக்கூட முடியாத அளவிற்கு பாகிஸ்தானிற்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர் வினய் நர்வலின் உறவுகளும், சொந்தங்களும்…