கோடை வெயிலின் உச்சத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பொதுமக்களின் பார்வை வெள்ளரிக்காயின் பக்கம் திரும்பியுள்ளது. சேலம் மாவட்டத்தில் களைக் கட்டும் வெள்ளரிக்காய் விற்பனை குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு நூறு டிகிரி செல்சியஸை தாண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பொதுமக்கள் குளிர்பானங்களையும், குளிர்ச்சிதரும் காய்கனிகளையும் விரும்பி உண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகச் சேலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரிப்பழம் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது.
மற்ற காய்கனிகளை ஒப்பிடும் போது வெள்ளரிக்காயில் தசைக்கு வலுசேர்க்கும் உயிர்ச்சத்தும், ரத்தத்தை வளப்படுத்தும் தாதுப் பொருட்களும் அமைந்துள்ளன. அத்துடன் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுவதால் ஏராளமான பொதுமக்கள் வெள்ளரிக்காயை விரும்பி வாங்கி உண்ணத் தொடங்கியுள்ளனர்.
தென் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் டன் கணக்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் வெள்ளரிக்காய்கள் சுவை மிகுந்ததாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
உடலுக்கு எந்தவித பின்விளைவையும் ஏற்படுத்தாத வெள்ளரிக்காய்களை கோடைக் காலத்தின் தவிர்க்க முடியாத உணவாகவும் பொதுமக்கள் உண்டு வருகின்றனர்.
காயாக, பழமாக, பழச்சாறாக என அனைத்து வகைகளிலும் உடலுக்கு உகந்ததாக இருக்கும் வெள்ளரி கோடை வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளக் கிடைத்த அருமருந்து என்று சொன்னால் மிகையாகாது.