சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு, பொன்முடி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் முதலமைச்சர் குறித்துத் தெரிவித்த கருத்துகளை மனுவில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு மனுவில் திருத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியது தொடர்பாக ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், பொன்முடிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.