ஸ்ரீபெரும்புதூர் அருகே சீரமைக்கப்படாத சாலைக்கு 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட கைவல்யம் நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள பிரதான சாலை சிதிலமடைந்து காணப்படும் நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மெட்டல் சாலையாகச் சீரமைக்கப்பட்டதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கிப் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர்.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், சீரமைப்பு பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.