காஷ்மீரில், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அமெரிக்காவின் M4 carbine மற்றும் AK-47 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அதிநவீனமான M4 carbine துப்பாக்கிகள் எப்படி தீவிரவாதிகள் கையில் கிடைத்தன ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தெற்கு காஷ்மீரின் பகல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான TRF தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில், 28 பேர் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து, 70 க்கும் மேற்பட்ட M4 மற்றும் AK-47 தோட்டாக்கள் மீட்கப் பட்டுள்ளன. உலகளவில் பலநாடுகளில் கள்ள மார்க்கெட்டிலும் AK-47 துப்பாக்கிகள் கிடைக்கின்றன.பாகிஸ்தானிடமும் நிறைய AK-47 ரக துப்பாக்கிகள் உள்ளன. உலகமெங்கும் பல தீவிரவாத அமைப்புகளும் AK-47 துப்பாக்கிகளை வைத்துள்ளனர். ஆனால் M4 carbine துப்பாக்கி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது.
Benelli Armi SpA என்ற இத்தாலி ஆயுத நிறுவனத்தால் The Benelli M4 துப்பாக்கி உருவாக்கப் பட்டது. இது ஒரு Semi-automatic shotgun ஆகும். 1980களில் 500,000 க்கும் மேற்பட்ட M4 carbine யூனிட்களை அமெரிக்கா தயாரித்துள்ளது. மிகவும் ஆபத்தான M4 carbine துப்பாக்கி, ஒரு நிமிடத்தில் 970 ரவுண்டுகள் தோட்டாக்களைச் சுடக்கூடிய திறன் கொண்டதாகும்.
M4 carbine துப்பாக்கிகளின் தோட்டாக்கள் எந்த கவச வாகனத்தையும் எளிதில் துளைத்துக் கொண்டு செல்லக் கூடியவையாகும். அதிகபட்சமாக 3,600 மீட்டர் வரை சுடக் கூடியதாகும். அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் ராணுவத்தில் மட்டுமே அமெரிக்காவின் M4 carbine துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு, ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் வேட்டைகளில் அதிக ஆபத்தான M4 carbine துப்பாக்கிகளை இந்திய இராணுவத்தினர் மீட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் போது M4 carbine துப்பாக்கிகள் உட்பட சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை விட்டுச் சென்றது.
தாலிபான்களால் கைப்பற்றப் பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் எல்லாம், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப் பாகிஸ்தானுக்கு அனுப்பப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரண்டு குறிப்பிடத்தக்கச் சந்திப்புகள் நடந்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ முகாமான தேஜினில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் நடத்திய அந்த கூட்டங்களில், காஷ்மீருக்கு முடிந்தவரை ஏராளமான ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் 15 புதிய தீவிரவாத முகாம்களையும், 24க்கும் மேற்பட்ட ஏவுதளங்களையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தயார்நிலையில் உருவாக்கி வைத்துள்ளதாகச் சென்ற ஆண்டே இந்திய உளவுத் துறை எச்சரித்திருந்தது.
பொதுவாகவே, எல்லையில் போர் நிறுத்தம் வரும் போதெல்லாம், பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாதிகளைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கிறது. குறிப்பாக, தீவிரவாதிகள் நுழைவதற்கு முன்னே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஆயுதங்களைப் பாகிஸ்தான் அனுப்பி விடுகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்காத நாடுகளை கிரே பட்டியலில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வைக்கிறது. சமீபத்தில் தான், அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. அதன்பிறகே, பாகிஸ்தானுக்குச் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இன்னொருபுறம், தனது கனிம வளத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவிடம் நல்ல பெயரை சம்பாதிக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்கிறது.
மேலும், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் தங்களின் அன்றாட தேவைகளுக்குப் பொதுமக்களின் ஆதரவை நாடுகின்றனர். பொதுமக்கள் அடைக்கலம் கொடுப்பதால், காஷ்மீருக்குள் தீவிரவாதிகளால் தாக்குதலை எளிதாக நடத்தப் படுகிறது.
இந்தப் பின்னணியில் தான், பகல்காம் தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் ஜம்மு காஷ்மீரைக் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.