ஓமலூர் அருகே நாட்டுவெடி வெடித்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பழைய சினிமா தியேட்டர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின.
இந்தக் கோர விபத்தில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கஞ்சநாயக்கன்பட்டி குருவாயூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த லோகேஷ் என்ற இளைஞர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையானதுடன் அருகில் இருந்த கார் மற்றும் 2 வீடுகள் சேதமடைந்தன.
கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.