ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பால் சுமார் 100 அடி உயரம் வரை புகை எழும்பி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், 516 பேர் வரை படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டு வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்கவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பந்தர் அப்பாஸ் துறைமுகம் எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிக முக்கியமானது என்பதால், இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகள், ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.