2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில், துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரது சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத 11 கோடியே 51 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
பின்னர், தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டபோது கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இதனிடையே, தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக எம்பி கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், எம்பி கதிர் ஆனந்த் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
அப்போது, வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வரும் 5ஆம் தேதி எம்பி கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.