விசாகப்பட்டினம் வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தன உற்சவ திருவிழாவின்போது, சுவாமி சிலை மீதான சந்தன உறை அகற்றப்பட்டு தெய்வத்தின் உண்மையான வடிவத்தைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான சந்தன உற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
சந்தன உற்சவத்தை காண 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் குவிந்த நிலையில், அதிகாலை கோயிலில் உள்ள 20 அடி நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த பேரிடர் மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆந்திர அமைச்சர் வாங்கலப்புடி அனிதா விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.