தமிழகத்தில் அங்கன்வாடிமையங்களில் பொருத்த வாங்கப்பட்ட LED TV-க்கள் சந்தை விலையை விட இருமடங்கு அதிகவிலைக்கு வாங்கப்பட்டிருப்பது தணிக்கை ஆய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. தொலைக்காட்சியைப் பொருத்துவதற்கான கட்டணம் இல்லாத நிலையில் அதற்குப் பணம் செலவிட்ட வகையில் 33 லட்ச ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவீனம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதி, மருத்துவம், உயர்கல்வி, சமூகநலம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான தணிக்கை அறிக்கை அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டபேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
2022- 23 ஆண்டு நடைபெற்ற தணிக்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையங்களில் LED TV-க்களை சந்தை விலையை விட இருமடங்கு விலையில் வாங்கியிருப்பது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சுமார் 800 அங்கன்வாடி மையங்களில் தலா 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் LED TV வாங்குவதற்கான அனுமதியை 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு வழங்கியிருந்தது.
அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் மற்றும் திருப்புல்லாணி பகுதிகளில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களால் LED TV ஸ்கிரீன், ஸ்டெபிலைசர் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை இணைந்து 24 ஆயிரத்து 900 ரூபாக்கு வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ஆய்வு செய்ததில் கொள்முதல் செய்யப்பட்ட LED TVக்களின் சந்தை விலை 12 ஆயிரத்து 490 ரூபாய் மட்டுமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் LED TVக்களை நிறுவுவதற்கான கட்டணம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட நிறுவனமே தெரிவித்துள்ள நிலையில், அந்த டிவிக்களை நிறுவுகிறோம் எனும் பெயரில் அதற்கும் டிவி ஒன்றுக்கு ஆயிரத்து 400 ரூபாய் நிறுவல் கட்டணம் செலுத்தப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருப்பது சிஏஜி அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள 11 குழந்தை வளர்ச்சி வட்டார அலுவலர்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி சுமார் 400 LED TVக்கள் கொள்முதல் செய்தலில் சுமார் 33 லட்சம் கூடுதல் செலவை ஏற்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் அங்கிருக்கும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும் LED TVக்களின் சந்தை விலையைவிட இருமடங்கு அதிக விலைக்கு வாங்கியிருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட திட்ட அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மையப்படுத்தப்பட்ட கொள்முதலுக்குப் பதிலாகக் குழந்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களே கொள்முதல் செய்ததே கூடுதல் செலவினங்களுக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய தணிக்கைக் குழு எழுப்பிய கேள்விகளுக்கு, LED TV இணையதளத்தில் பொருட்களின் விலை மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், வழங்குதல் மற்றும் நிறுவல் கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்ற தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
ஆனால் அதுவும் உண்மைக்கு மாறான தகவல் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் LED TVக்களை நிறுவுவதற்கு மின்சார பாகங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதைத் தணிக்கைத் துறை உறுதி செய்துள்ளது.
இறுதியில், இனிவரும் நாட்களில் மாவட்ட திட்ட அலுவலகங்களின் மையப்படுத்தப்பட்ட கொள்முதலே பின்பற்றப்படும் என வேறுவழியின்றி தமிழக அரசு உறுதியளித்துள்ளது
இதன் மூலம் மழலைக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் அங்கன்வாடி மையங்களில் LED TV அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடந்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சந்தைவிலையை விட இருமடங்கு அதிகமாக வாங்கியதோடு, நிறுவல் கட்டணம் எனும் பெயரில் இல்லாத கட்டணத்திற்குக் கணக்குக் காட்டியிருப்பதும் தணிக்கை அறிக்கை மூலமாக அம்பலமாகியுள்ளது.