ஶ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் அவதார உற்சவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜர் பிறந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆதிகேசவ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, பிரம்மோற்சவம் மற்றும் ராமானுஜர் அவதார உற்சவம் விழா கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
நாள்தோறும் தங்கப் பல்லக்கு, மங்களகிரி வைபவம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் ஶ்ரீராமானுஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்வான ராமானுஜரின் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
50 அடி உயரம் கொண்ட தேரில் ராமானுஜர் எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.