காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். அட்சய திருதியை நாளில் சந்நியாஸ்ரம தீட்சை பெற்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்து வந்த ஆன்மீகப்பாதையை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் துனி எனும் கிராமத்தில் பிரம்மஸ்ரீ துட்டு ஸ்ரீநிவாச சூர்ய சுப்பிரமணிய தன்வந்திரி அலிவேலு மங்காதேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்த கணேச சர்மா திராவிட்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நிர்மல் மாவட்டம் பசாராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் ரிக்வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட், தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடம் ஷப்தமஞ்சரி, தாதுரூபாவளி, சமாசகுசுமாவளி உள்ளிட்ட பிற நூல்களையும் பயின்றார்.
ரிக்வேத அறிஞரும் சமஸ்கிருத ஆசிரியருமான ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும், சமஸ்கிருத கல்வியைப் பயிலத் தொடங்கிய கணேச சர்மா திராவிட்டுக்கு 2009ம் ஆண்டு கோடைவிடுமுறையின் போது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே பின்னாளில் அவரின் ஆன்மீகப்பாதைக்கு பெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ரத்னாகர பட்டை சந்தித்து அவரிடம் வேத பயிற்சியைத் தொடங்கிய கணேச சர்மா திராவிட், உபாகர்மாவை முடித்த பின்பு ஆசிரியர் இல்லத்திலேயே 12 ஆண்டுகள் தங்கியிருந்து குருசேவை செய்துவந்தார்
ரிக்வேத சம்ஹிதை, ஐதரேய பிரஹ்மணம், ஆரண்யகம் மற்றும் உபநிசத்துகளை கற்றுத்தேர்ந்த கணேச சர்மா, ஸ்ரீ ரத்னாகர பட்டின் மகனும், ரிக்வேத அறிஞருமான ஸ்ரீநிவாச சர்மாவிடம் பிரதிஷாக்யம், வியாலி சிக்ஷா உள்ளிட்ட மேம்பட்ட வேதநூல்களோடு ஜடாபாதத்தையும் கற்றார். சமஸ்கிருதம், வேத நூல்கள், வேந்தாந்த படிப்பு உள்ளிட்டவை வேதத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கணேச சர்மாவுக்கு ஏற்படுத்தின.
2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்த பிறகு சென்னையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தரிசனம் ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டுக்கு வாய்த்தது.
ஆந்திரமாநிலம் மஹபூப் நகரில் முகாமிட்டிருந்த சுவாமிகளிடம் தனது வேத படிப்பு நிறைவடைந்ததையும், கோயிலில் தனது சேவை தொடங்கியதையும் எடுத்துரைத்த கணேச சர்மா, சுவாமிகளின் கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு காக்கிநாடாவில் நடந்த சாதுர்மாஸ்யத்தின் போதும் சுவாமிகளின் ஆசி கணேச சர்மாவுக்குக் கிடைத்தது.
2024ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சொந்த கிராமமான தண்டலம் உட்பட காகவாக்கம், சூலமேனி அக்ரஹாரம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு ஸ்கந்தகிரியில் நடந்த ரிக்வேத சம்ஹிதை பாராயணத்திலும் பங்கேற்றார்.
அதே ஆண்டு மார்ச் மாதத்தில் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி திருப்பதியில் பத்து நாட்கள் தங்கியிருந்து பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவங்களில் பங்கேற்ற பின் காஞ்சி வந்து அம்பாளைத் தரிசித்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தார்.
ஏப்ரல் 14ம் தேதி முதல் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஓராண்டு காலம் வேத பயிற்சி பெற்ற கணேச சர்மா காஞ்சி பீடத்தின் 71வது இளைய பீடாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ கணேச சர்மா திராவிட்டிற்கு சந்நியாஸ்ரம் தீட்சை அருள் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இளைய பீடாதிபதிக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற தீட்சாநாமமும் சூட்டப்பட்டது.
ரோகிணி நட்சத்திரத்தில் அட்சய திருதியை அமைவது மிகவும் அபூர்வ அமைப்பாகும் என்பதோடு அடுத்த 27 ஆண்டுகளுக்கு பிறகே இப்படி ஒரு அமைப்பு நிகழும் எனக் கூறிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி சங்கர மடத்தின் குரு பரம்பரையும் புதியதாக ஒரு குருநாதர் கிடைத்திருப்பதாகவும், அவரை வணங்கி அவரது உபதேச மொழிகளைக் கேட்டுப் பயன்பெற வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.