கங்கை விரைவுச்சாலையில் இப்போது போர் விமானங்கள் இரவில் தரையிறங்குவதற்கு வசதியாக ஒரு பிரத்யேக விமான ஓடுபாதை இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், விரைவுச்சாலைகளில் நான்கு விமான ஓடுபாதைகளைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2021ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, கங்கை விரைவு சாலை திட்டத்துக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விரைவுச் சாலை மீரட்-புலந்த்ஷஹர் சாலையில் NH-334 உள்ள பிஜௌலி கிராமத்தில் தொடங்கி பிரயாக்ராஜ் பைபாஸ் NH-19 அருகிலுள்ள ஜூடாபூர் தாது கிராமத்தில் முடிவடைகிறது.
கங்கா விரைவுச் சாலை, உத்தரப்பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கிறது. நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் இதுவும் ஒன்றாகும். மீரட்டிலிருந்து பிரயாக்ராஜ் வரை சுமார் 594 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையை அடுத்து இது நாட்டின் இரண்டாவது நீளமான விரைவுச் சாலை ஆகும்.
36,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள,கங்கை விரைவு சாலை, மாநிலத்தின் 12 மாவட்டங்களைக் கடந்து செல்கிறது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தை அனுமதிக்கும் இந்த விரைவு சாலையால், மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையேயான பயண நேரம் 11 மணி நேரத்திலிருந்து வெறும் 6 மணி நேரமாகக் குறைகிறது.
மொத்தம் 7,467ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட இந்த விரைவு சாலை முதலில் ஆறு வழிச் சாலையாகத் தான் திட்டமிடப்பட்டது. பிறகு 120 மீட்டர் கூடுதல் அகலத்துடன் எட்டு வழிச் சாலையாக நீட்டிக்கப் பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக, இந்த சாலையின் பல்வேறு இடங்களில் ஒன்பது பொது வசதி மற்றும் வணிக வளாகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
மீரட் மற்றும் பிரயாக்ராஜில் இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, கங்கை நதியின் மீது 960 மீட்டர் தூரத்துக்கும், ராம் கங்கா நதியின் மேல் 720 மீட்டர் தூரத்துக்கும் இரண்டு பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர 18 மேம்பாலங்களும் 8 சாலை மேம்பாலங்களும் கட்டுப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் 10 விரைவுச் சாலைகளில் நான்கு சாலைகள் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் தான் உள்ளன. அவை யமுனா விரைவுச்சாலை, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை, பூர்வாஞ்சல் விரைவுச்சாலை, மற்றும் பண்டேல்கண்ட் விரைவுச்சாலைகளாகும். இப்போது கங்கை விரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், நாட்டின் முதல் 10 விரைவுச் சாலைகளில் ஐந்து சாலைகள் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கும்.
ஏற்கெனவே, (Agra–Lucknow Expressway )ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை, (Purvanchal Expressway) பூர்வாஞ்சல் விரைவுச்சாலை மற்றும் ( Bundelkhand Expressway)புந்தேல்கண்ட் விரைவுச்சாலை ஆகியவற்றில் விமான ஓடுபாதைகள் வெற்றிகரமாக அமைக்கப் பட்டுள்ளன.
2017ம் ஆண்டு அக்டோபரில், ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் ( Mirage 2000 ) மிராஜ்-2000 மற்றும் (Sukhoi-30 MKI ) சுகோய்-30 எம்கேஐ உள்ளிட்ட ஆறு இந்திய விமானப் படை ஜெட் விமானங்கள் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தன.
2021ஆம் ஆண்டு, நவம்பரில் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையின் திறப்பு விழாவில்,பிரதமர் மோடி முன்னிலையில், ( C-130J Super Hercules ) சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் ராணுவ விமானம் தரையிறங்கி ஆச்சரியப்படுத்தியது.
2022ம் ஆண்டு திறக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலையிலும், விமான ஓடு பாதை வெற்றிகரமாக அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சூழலில், கங்கா விரைவுச்சாலையில் ஷாஜகான்பூர் விமான ஓடு பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், உத்தரப் பிரதேசம் விரைவுச்சாலை மேம்பாட்டில் நான்கு விமான ஓடுபாதைகளைக் கட்டியுள்ளது. இது நாட்டின் வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத அரிய சாதனையாகும்.
விரைவுச்சாலைகளில் விமான ஓடுபாதைகளை ஒருங்கிணைப்பது, போர்க்கால தயார்நிலை மற்றும் பேரிடர் மீட்புக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கங்கை விரைவுச் சாலையில் 3.2 கிலோமீட்டருக்கு மேல் கட்டப்பட்டு வரும் இந்த விமான ஓடுபாதை, நவீன விமான தர விவரக்குறிப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்தவும், உறுதி செய்யவும், கண்காணிப்பைத் துல்லியமாக்கவும் இந்த விமான ஓடுபாதையின் இருபுறமும் சுமார் 250 சிசிடிவி கேமராக்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எளிதாக இரவில் தரையிறங்குவதற்கு வசதியாக மேம்பட்ட விளக்குகள் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகள் பொருத்தப் பட்டுள்ளன.
இதனால், இரவில் போர் விமானங்கள் தரையிறங்கும் திறன்களைக் கொண்ட நாட்டின் முதல் விரைவு சாலை இதுவாகும். இது வெறும் சாலை மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சிக்கான உயிர்நாடி மற்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஓடுபாதை என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது வெறும் வார்த்தை அல்ல உண்மை.