மங்களூருவில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகே ஹிந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ்செட்டி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். பஜ்பே பகுதியில் சென்றபோது சுஹாஸ்செட்டி காரை விபத்துக்குள்ளாக்கிய மர்ம நபர்களால், அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி நிலையில், படுகொலை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனிடையே, சுஹாஸ்செட்டி படுகொலையைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது. இதனால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னட மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் மங்களூரு நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து வந்த நான்கு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.