சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து, 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள வெளாங்காட்டு வலசு பகுதியில் 75 வயது முதியவரான ராமசாமி என்பவர் மனைவியுடன் வசித்து வந்தார். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த பெற்றோரை, மகன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அச்சமடைந்த அவரது மகன், அந்த பகுதியில் வசிக்கும் உறவினரை தொடர்பு கொண்டு பெற்றோரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, உறவினர் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வயதான தம்பதியை அடித்து கொன்று 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. வீட்டினுள் உள்ள பீரோவில் இருந்தும் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.