கடலூர் கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான விசிகவின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அதர்நத்தம் பகுதியைச் சேர்ந்த விசிகவின் முன்னாள் நிர்வாகியான செல்வம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையேயான முன்விரோத வழக்கை விசாரிப்பதற்காக செல்வத்தின் தோட்டத்து வீட்டிற்கு போலீசார் சென்றபோது ஒரு கும்பல் தப்பியோடியது.
இதனால், சந்தேகமடைந்த போலீசார், செல்வம் வீட்டில் சோதனை செய்தபோது 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கின் முக்கிய நபரான செல்வம் தலைமறைவாக இருந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 5க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த செல்வத்தை போலீசார் கைதுசெய்து கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.