திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேகடன் தொகையைச் செலுத்தத் தாமதமானதாகக் கூறி, 7 வீடுகளுக்குத் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பூட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது மனைவி கீதா என்பவருடன் வசித்து வருகிறார்.
இவர் சோழமண்டலம் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில், கடன் தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி, சயனின் வீடு மற்றும் ஆறு வாடகை வீடுகளுக்கும் நிதி நிறுவனம் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
இச்சம்பவத்தால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், அப்பகுதி மக்களைச் சாட்சி கையெழுத்திடக் கூறி நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.