கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டபோது தற்காலிக படிக்கட்டு சரிந்ததில் விசிக எம்.எல்.ஏ-வுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சிதம்பரம் புறவழிச் சாலையில் வரும் 6-ம் தேதி விசிக சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பணிகளை பார்வையிடுவதற்காக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் வருகை தந்தனர். பணிகளை பார்வையிட்டபின் தற்காலிக படிக்கட்டு வழியாக மேடைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தற்காலிக படிக்கட்டு சரிந்ததில் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்ட அனைவரும் கீழே விழுந்தனர். இதில் எம்எல்ஏ பாலாஜி-க்கு லேசான காயம் ஏற்பட்டது.