திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 3-ஆம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாகச் செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா நடைபெற்றது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி வீதியுலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் சென்றனர்.
பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.